F பஞ்சவர்ணேஸ்வரரின் பஞ்சாமிர்தம்: 5.கோபுரம்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

Monday, 14 January 2013

5.கோபுரம்


கோபுரம்

முதலில் நாம் நுழைவது கோபுர வாயில்.

கோயில்கட்ட ஆரம்ப நிலையில் விமானம்தான் முக்கியமாக இருந்தது. பின்னால் 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாயில் கோபுரங்கள் கட்டிடக்கலை அடிப்படையில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிய போது, விமான அமைப்பு பெருமளவு முக்கியத்துவத்தை இழந்தது.

தென் இந்திய கோயில்களும் வட இந்திய கோயில்களும் அமைப்பில் வித்தியாசமாக இருக்கும். வடநாட்டுக் கோயில்கள் அவற்றிற்கென்று உரிய முறையில் கட்டப் பட்டிருக்கும். கோயில் அமைப்பு என்பது ஆகமம்  எனச் சொல்லப்படும் வழிமுறை அல்லது சமயக்கொள்கை, சிற்ப சாஸ்திரம் (கட்டிடக் கலை) இரண்டும் இணைந்து உருவானது. சிற்ப சாஸ்திரத்திலிருந்து நான்கு கோயில் அமைப்பு முறைகள் உள்ளதாக அறிகிறோம் - நாகரம் (அகன்ற சதுர வடிவ  விமானம் வட இந்திய கோயில்கள்), வேசரம் (வட்ட அமைப்பு ஒரிஸ்ஸா, வங்காள கோயில்கள்) , கூர்ஜரம் (பென்சில் சீவியது போல கூரிய முனை கோபுரம் குஜராத் பக்கம் இருப்பது போல்), திராவிடம் (பல கோணங்கள் அதாவது facets தென்னிந்திய கோபுர) அமைப்பு.

தமிழ் நாட்டுக் கோயில்களில், நாகர அமைப்புடன் பரவலாகப் பல கோயில்களை காண முடியும். முழுக்க முழுக்க திராவிட அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்கள் நம்மிடையே இல்லை. முழுதாக வேசர அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்களும் இல்லை.

நுணுக்கமான வேலப்படுகளுடன் கூடிய கோயில்கள்  அனேகம். வடக்கில் பூரியின் ஜகன்னாதர், புவனேஷ்வர் லிங்கராஜர், கொனார்க் சூர்யபகவான் கோயில்களின் அதி அற்புதமான நுணுக்கங்கள் கொண்டவை. இவை அந்தப் பிரதேசத்தில் புழக்கத்தில் இருந்த சைவ, வைணவ ஆகமங்களையும், சிற்ப சாஸ்திரத்தையும் இணைத்து அமைக்கப் பட்டவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  தென்னாட்டிலேயே  கேரளக் கோயில்கள் ஒரு தனி அமைப்பு, கர்நாடகவில் ஒரு அமைப்பு என இருக்கின்றன. ஆனால் இவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சங்கள் கோபுரம், பிராகாரம், விமானம், கருவறை என இருப்பதை நாம் பார்க்கலாம்.

எல்லா ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது கோபுரமே. கோபுரத்தை ஸ்தூல லிங்கம் என்று கூட கூறுவார்கள். எல்லா ஆலயங்களிலும் பொதுவாக கோபுரங்கள் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தைக் காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில்  இருப்பவர்களுக்கும் இறைவன் நினைவு கூறவும் கோபுரம்  உயர்ந்திருக்கிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல மாடி கட்டிடங்கள் வந்த பிறகு ஆலயம் இருப்பதைத் தேடி கண்டு பிடிக்க வேண்டிருக்கிறது என்றாள் நண்பணின் மனைவி
இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்கிறார்ளோ  என்று கேட்டாள் சகதர்மணி.

சரியாகச் சொன்னாய். ....... இது நண்பன்.

கோபுரத்தின் அருகில் சென்று அதன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்கள் இருப்பதை காண்கிறோம். அவற்றுள் மனித  வடிவங்களையும் காணலாம்.  இறைவனின் திருவிளையாடல்கள்அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், சிருங்கார காட்சிகள், ஏனைய  சிற்றுயிர்கள்   இருக்கும்.  பிரபஞ்ச அமைப்பில் இவைகளுக்கும் இடமுண்டு என்பதைதான் அவைகள் குறிப்பிடுகின்றன. சுருங்கச் சொன்னால் உலகில் இன்னது இருக்கிறது என்று பறை சாற்றி இயற்கையின் நடைமுறையின் புறச்சின்னம்தான் கோபுரங்கள்.

கோபுரத்தில் பல சிற்ப வேலைப்படுகளை பார்க்கிறோம். இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் ( காஞ்சி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்) சொன்னதாக திரு நாகஸ்வாமி அவர்கள் எழுதியிருப்பதை நினவு கூற வேண்டும்.  ஆதிகாலத்தில்... அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது.  அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை விஸ்வகர்மாவாக வந்து வடிவமைத்ததுபோல... அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் விஸ்வகர்மாவாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே, நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்கவேண்டும்

கோபுரம், விமானம் எல்லாம் ஒன்றுதானே?
இல்லை. நுழை வாயிலில் இருப்பது கோபுரம். கருவறை மேல் இருப்பது விமானம்.

கருவறைன்னா? - நண்பண்

ஆலையத்தின் பிரதான கடவுள் இருக்கும் இடம் sanctum sanctorum  என்பார்களே அதுதான்.

ஆரம்ப காலத்தில் கருவறையின் மேல் மட்டும்தான் விமானம்  கட்டப்பட்டது. ஆனால் பிற்பாடு மதில் சுவரின் மேல் கோபுரம் கட்டும் வழக்கம் வந்தது. கோபுரம் என்றால் கோயிலின் பெருவாயில்; சிகரி என தமிழில் சொல்வார்கள். எப்படி இந்த வழக்கம் வந்திருக்கக்கூடும் என்பதற்கு போசி ப்ரொவுன் என்பபவர் தன் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்.

தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான சிறிய கோயில்களுட் பல, கட்டிடக்கலை அடிப்படையில் சிறப்பு வாய்ந்தனவாக இல்லாவிட்டாலும், புனிதத்தன்மை கொண்டனவாகக் கருதப்பட்டன. இந்த உணர்வு காரணமாகப் பெரிதாக்குவதற்காக அவற்றை இடிப்பது கூடாது எனக் கருதப்பட்டது. இதனால் கருவறையை அவ்வாறே இருக்கவிட்டு அதனை அண்டி வேறு அமைப்புக்களை உருவாக்கிக் கோயிலை விரிவாக்கினர். கோயிலின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக அதனைச் சூழப் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. வாயில்களிலே கோபுரங்களும் விமானத்தையும் தாண்டிப் பெரியவையாக வளரலாயின. கோபுரங்களின் உயரம் வளர்வது கோயிலின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி அதனைக் கட்டுவித்தவரது அதிகார பலத்துக்கும் சாட்சியாக அமைந்தது

கோபுரம் ஒரு கம்பீரத்துடன் ஒங்கியிருந்தால் அதை இராஜ கோபுரம் எனப்படும்

கோபுரத்தின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினென்று என்ற நிலையில் கோபுரம் வாயில் அமைந்திருக்கும். அத்தகைய வாயில் தத்துவத்துக்கு ஒரு விளக்கம் அளிப்பார்கள்.  மூன்று வாயில் உள்ள இராஜ கோபுர இடம் ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளை குறிப்பதாகவும்  ஐந்து வாயில்கள் உள்ள இடம் ஐம்பொறிகளை குறிப்பதாகவும்ஏழு வாயில் உள்ள இடம் மனம், புத்தி எனும் இன்னும் இரண்டு தத்துவங்கள் ஐம்பொரிகளுடன் சேர்க்கப் பெறுவதாகவும். இதனுடன் இன்னும் இரண்டு தத்துகவங்கள் சித்தம், அகங்காரம்- சேர்ந்து ஒன்பது வாயிலை குறிப்பதாகவும் சொல்வார்கள். இவ்வாறு கோயில் வாசல் வெவ்வேறு தத்துவங்களுக்குக் சின்னங்களாக அமைந்திருக்கின்றன.  இங்கு நாம் காண்பது ஐந்து வாசல் கோபுரம்.

கதவைப் பார்த்தாயா?



ஆடும் பெண்கள், கோலாட்ட விளையாட்டுகள் இருக்கின்றன. பரத நாட்டிய முத்திரைகள் என்பர் சிலர். முன்பு இருந்ததை விட  தற்சமயம் இந்த கதவுகள் க்ஷீணமடைந்து இருக்கின்றன.  அவசியம் மாரமத்து பார்க்க வேண்டும். ஆஸ்தீக அன்பர்கள் மனமுவந்து உதவ வேண்டும்.

என்ன செய்யலாம்?

இந்த ஊரைச் சேர்ந்த இராமதாஸர் என்பவர் முயற்சி செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு  உறு துணையாக இருக்கலாம்.

2 comments:

  1. Comment form Natarajan

    அற்புதம்
    I am having a 7 pages article on Nallur

    Are there 2 Lingams in one ஆவுடையார் ?
    Have you seen it ?

    ReplyDelete
    Replies
    1. Yes we are aware of it. We will write about it when we enter the Karbha graha

      Delete