F பஞ்சவர்ணேஸ்வரரின் பஞ்சாமிர்தம்: 3.மாடக்கோயில்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

Monday, 14 January 2013

3.மாடக்கோயில்


3
மாடக்கோயில்

“குளத்தில் இறங்கி குளிப்பதற்குக்கூட சில விதிமுறைகள் இருக்கின்றன தெரியுமா?”

அப்படியா அது என்ன?”, இது என் நண்பனின் மனைவி தொடுத்த கணை.

“குளத்தில் இறங்கும் பொழுது கால்களை முதலில் இறங்குவதற்கு முன்னால் படித்துறையிலிருந்து கொண்டே கையினால் சிறிது நீரையெடுத்து தன் சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். நீராட இறங்கினாலும் தலை ப்ரோஷணம் செய்து கொண்டு குளத்தில் இறங்கி ஆலயம் இருக்கும் பக்கம் பார்த்துக் கொண்டு நீராட வேண்டும். நதிகளில் நதி வரும் திசை நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். இதுதான் முறை. அப்படியே நாமும் செய்வோம்.


இந்த கோயில் ஒரு மாடக் கோயில்களில் ஒன்றாகும்.

மாடப்புறா கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன மாடக் கோயில்?”, இப்படி கேட்டது சாட்சாத் என் தர்ம பத்தினியே.

 இதைப் பற்றி விளக்குவதற்கு நான் ஒரு புராணக் கதை சொல்லப் போகிறேன். கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும். நான்தான் தர்மபதி ஆயிற்றே. அவள் ஆசையையும் பூர்த்தி செய்யலாமே. மூவரும் ஆர்வத்துடன் என்னைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 காலச் சுழல்  பின் நோக்கி செல்கிறது....

காவிரி நதிக்கரையில் திரு ஆனைக்காவில் (திருவானைக்கா) ஒரு சோலையில் வெண் நாவல் மரத்தடியில் இருந்த  சிவலிங்கத்தை ஒரு வெள்ளை யானை பூஜித்து வந்தது. தும்பிக்கையினால் தண்ணீர் சுமந்து வந்து, பூக்களை கொய்து வந்து சாத்தி வணங்கி வந்தது.  அதே இடததில் அதே காலக் கட்டத்தில் ஒரு சிலந்தி பூச்சியானது மரத்தின் இலைகள் ஈசனின் மேல் விழாமலிருக்க தன் வாய் நூலால் பந்தலிட்டு வந்தது. தான் பூஜித்து வந்த இடத்தில் சிலந்தியின் எச்சில் கூட்டை கண்டு அது அசுத்தம் என யானை அதை அழித்து விடும். சிலந்தி பின்னும் பின்னலிடும். இவ்வாறாக பல நாட்கள் நடந்து வந்தது. தான் கட்டிய பந்தலை அழிப்பது யார் என பார்க்க சிலந்தி பூச்சி மறைந்திருந்து பார்த்து, யானை என்று அறிந்து கோபம் கொண்டது. நம்போல்தான் அனைவரும் என்று ஆறறிவு படைத்த பல மானிடருக்கே தெரியாத பொழுது சிலந்தியிடம் எதிர்பார்கலாமா?

யானையை கொல்ல நினைத்து. தானும் மாண்டு போவோம் என அறியாமல் யானையின் துதிக்கைக்குள் நுழைந்து கடித்தது. துன்புற்ற யானை துதிக்கையை பலமுறை தரையில் ஓங்கி அடித்தால் சிலந்தியும் இறந்தது. யானையும் சிலந்தியின் விஷத்தால் மாண்டது. பரஸ்பரம் கோபம் இருந்தாலும், மூல காரணம் இருவருக்குள்ளும் இறைவன்பால் இருந்த பக்திதான் என்பதால் உமையொருபாகன்  காட்சி தந்து திரு அருள் புரிந்தார். நமக்குள் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் ஆண்டவனுக்கு யாவருமே சமம். இருவருக்கும் அருள் புரிந்தார். யானை சிவபதம் அடைந்தது. சிலந்தி சோழவம்சத்தில் அரசனாக பிறந்தது. இரண்டுமே சிவப்பூசை செய்தாலும், சிலந்தி யானையை கொல்ல முதலில் நினைத்ததால் அதற்கு மீண்டும் பிறக்க நேரிட்டது. ஆயினும் முன் பிறப்பில் செய்த சிவத்தொண்டினால் மீண்டும் சிவத்தொண்டு செய்யும் பாக்கியம் கிட்டியது. சோழ அரசனாகப்  பிறந்தது அந்த சிலந்தி. கோப்பெரும் சோழன் என்ற பெயர் பெற்றான். முற்பிறப்பின் உணர்வினால் பல சிவாலயங்களைக் கட்டினான் அவன். அவன் கட்டிய கோயில்கள்தான் மாடக்கோயில்கள் எனப் பிற்காலத்தில் வழங்கப் பெற்றது.

அவன் கட்டிய காலம் எப்போது?

சுமார் கிபி 3 – 4 ம் நுற்றாண்டு.

அப்படியென்றால் இந்த கோயில் 1700 ஆண்டுகளா?

அப்படித்தான் தோன்றுகிறது. அவன் கட்டிய காலத்தில் செங்கல்லும் மரமும்தான் உபயோகித்திருப்பதாக வரலாறு சொல்லுகிறது. பிற்காலத்தில் (கி.பி 7ம் நுற்றாண்டில்) கருங்கல் அமைத்து கட்டப் பட்டிருக்க வேண்டும்.

அவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தினான். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவனாக இன்றும் கொண்டா டப்படுகின்றான்.

சிலந்தியும் ஆனக்காவில் திருநிழல்பந்தர் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக்
கலந்த நீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே

என்று சிலந்திச் சோழனாக பிறந்ததைப் பாடினார் அப்பர் பெருமான்.

பசுபதி கோயில் பசுபதீஸ்வரர் ஆலைய கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.


அப்படியா ஆச்சரியமாக இருக்கின்றதே.

முன்பிறவியில் யானை செய்த செய்கையினால் அதன் மீது பகை கொண்டு யானை புக முடியாதபடி அவன் கட்டிய கோயில்களே மாடக்கோயில்களாகும். யானை பெரிய உருவம் கொண்டது. அதனால் படிகளில் ஏற முடியாது. அப்படி ஏறினாலும் இறங்க முடியாது. அதனால் யானை இறங்கமுடியாமலோ அல்லது ஏற முடியாமலோ இருக்கும்படியான கோயில்களை கட்டினான். இப்புதுமையான அமைப்புமுறையில் செய்யப்பட்ட கோயில்களில் கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் அமைக்கப் பட்டது. சங்ககாலத்துக் கோயில்களின் அமைப்பு முறையிலிருந்து கோப்ப்பெரும்சோழன் கோயில் அமைப்பு முறைகள் மாறுபட்டன... தஞ்சை பெரிய கோயில் போன்று உயரம் அதிகமாக்கப்பட்ட தளத்தில் அமைக்கப்பட்ட கோயில்களை மாடக்கோயில் என்று சொல்லப்படுவதில்லை. இதை வேறு விதமாகவும் சொல்லாம் யானை – சிலந்தி கதை இல்லாமல். செங்கல்லினாலும் மரத்தினாலும் கட்டப்படும் கோயில்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற உயரமான இடத்தில் அமைக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கும். அதனாலேயே ஒரு உயரமான இடத்தில்கோயில்கள்கட்டப்பட்டிருக்க
வேண்டும்.

ஒரு வெற்று தளத்தின் மேல் கட்டப்பட்ட கோயிலாகும் ‘கோயில் கட்டடக் கலை வளர்ச்சியில் ஒரு படி’ என்று மாறுப்பட்ட கருத்தும் உண்டு.

இதைத்தவிர அவன் கட்டிய கோயில்கள்  எது?

செம்பியன் கோச்செங்கண் சோழன் கட்டிய சிவன் கோயில்கள் எழுபதாகும்.


இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசர்க்கு
எழில்மாடம் எழுபதுசெய் துலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மிங்களே 

என திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.

அவன் கட்டிய மற்ற கோயில்களிலின் பட்டியல் ஒன்று இருக்கிறது என்னிடம் கேட்டு வாங்கிக்கொள். (அந்த பட்டியல்

நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருமருகல் மாணிக்கவண்ணர் திருக்கோயில், தேவனூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், வலிவலம் மனத்துணை நாதர் திருக்கோயில், குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில், சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், திருவிளையாட்டம் சுயம்பு நாதர் திருக்கோயில், சாயானம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், வைகல் வைகல் நாதர், மணக்கால் அய்யம்பேட்டை (பெரு வேளூர் ) அபிமுக்தேஸ் வரர் திருக்கோயில், திரு அம்பர்ப் பெருந்திருக் கோயில், திருவைகன் மாடக்கோயில், திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் ஆலயம் ( அஜனீஸ்வரம்), பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் (ஆலந்துறை நாதர்)ஆலயம், பெண்ணாகடம், இலுப்பைப் பட்டு (மண்ணிப்படிக்கரை), செம்பிருப்பு செம்பனார் கோயில் ஸ்வர்ணபுரீஸ்வரர், வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், தான்தோன்றீசுவரர் கோயில், பெருமுளை, தேரழுந்தூர், மாத்தூர், எண்கண், அம்பர் மாகாளம், பாம்புரம், திருக்கழந்தை,  இராசசேரிபுரம், கீழைவழி ( கீழையூர், கீழூர்) கடைமுடிநாதர், அந்தி சம்ரக்ஷணீஸ்வரர் தண்டலை நீள்நெறி நாதர் கோவில் ( தண்டலச்சேரி), நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காய ரோகணம், வீழிமிழலை, பனையூர் திருமீயச்சூர் மேகநாத ஸ்வாமி கோயில், திருவானைக்கா, மண்ணச்சநல்லூர்: பணமங்கலம் வாரணபுரீஸ்வரர் கோவில் (சுவாமி திருமேனி உளிப்படாத ஆவுடை சதுர்முகநாதர் லிங்கமாக உள்ளது))

நல்லூரையும் சேர்த்து 49 கோயில்கள். மற்ற 21 கோயில் விபரம் கிடைக்கவில்லை. கால வெள்ளத்தில் அழிந்திருக்கலாம். அல்லது மாற்றி அமைத்திருக்கலாம்.

இவைகளில் அளவில் பெரியது இந்தக் கோயிலாகிய கிரிசுந்தரி ஸமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் ஆலயமே.

1700 ஆண்டுகள் புராதானமான கோயில் என்று கேட்டாலே மலைப்பாக இருக்கிறதே!

இருக்காதா பின்னெ. நம் செல்வங்கள் அவ்வளவு புராதானமானது.

1 comment:

  1. Comment form Sundar

    Very well written article and very informative. I was not aware of quite a few pieces of information that you have coined together. More than the temple specific info, the generic pieces of info on கோசெங்கசோழன் was pretty informative. I am amazed as to how you were able to collect the info on temples that he had built.

    ReplyDelete