F பஞ்சவர்ணேஸ்வரரின் பஞ்சாமிர்தம்: January 2013

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

Monday, 14 January 2013

5.கோபுரம்


கோபுரம்

முதலில் நாம் நுழைவது கோபுர வாயில்.

கோயில்கட்ட ஆரம்ப நிலையில் விமானம்தான் முக்கியமாக இருந்தது. பின்னால் 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாயில் கோபுரங்கள் கட்டிடக்கலை அடிப்படையில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிய போது, விமான அமைப்பு பெருமளவு முக்கியத்துவத்தை இழந்தது.

தென் இந்திய கோயில்களும் வட இந்திய கோயில்களும் அமைப்பில் வித்தியாசமாக இருக்கும். வடநாட்டுக் கோயில்கள் அவற்றிற்கென்று உரிய முறையில் கட்டப் பட்டிருக்கும். கோயில் அமைப்பு என்பது ஆகமம்  எனச் சொல்லப்படும் வழிமுறை அல்லது சமயக்கொள்கை, சிற்ப சாஸ்திரம் (கட்டிடக் கலை) இரண்டும் இணைந்து உருவானது. சிற்ப சாஸ்திரத்திலிருந்து நான்கு கோயில் அமைப்பு முறைகள் உள்ளதாக அறிகிறோம் - நாகரம் (அகன்ற சதுர வடிவ  விமானம் வட இந்திய கோயில்கள்), வேசரம் (வட்ட அமைப்பு ஒரிஸ்ஸா, வங்காள கோயில்கள்) , கூர்ஜரம் (பென்சில் சீவியது போல கூரிய முனை கோபுரம் குஜராத் பக்கம் இருப்பது போல்), திராவிடம் (பல கோணங்கள் அதாவது facets தென்னிந்திய கோபுர) அமைப்பு.

தமிழ் நாட்டுக் கோயில்களில், நாகர அமைப்புடன் பரவலாகப் பல கோயில்களை காண முடியும். முழுக்க முழுக்க திராவிட அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்கள் நம்மிடையே இல்லை. முழுதாக வேசர அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்களும் இல்லை.

நுணுக்கமான வேலப்படுகளுடன் கூடிய கோயில்கள்  அனேகம். வடக்கில் பூரியின் ஜகன்னாதர், புவனேஷ்வர் லிங்கராஜர், கொனார்க் சூர்யபகவான் கோயில்களின் அதி அற்புதமான நுணுக்கங்கள் கொண்டவை. இவை அந்தப் பிரதேசத்தில் புழக்கத்தில் இருந்த சைவ, வைணவ ஆகமங்களையும், சிற்ப சாஸ்திரத்தையும் இணைத்து அமைக்கப் பட்டவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  தென்னாட்டிலேயே  கேரளக் கோயில்கள் ஒரு தனி அமைப்பு, கர்நாடகவில் ஒரு அமைப்பு என இருக்கின்றன. ஆனால் இவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சங்கள் கோபுரம், பிராகாரம், விமானம், கருவறை என இருப்பதை நாம் பார்க்கலாம்.

எல்லா ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது கோபுரமே. கோபுரத்தை ஸ்தூல லிங்கம் என்று கூட கூறுவார்கள். எல்லா ஆலயங்களிலும் பொதுவாக கோபுரங்கள் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தைக் காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில்  இருப்பவர்களுக்கும் இறைவன் நினைவு கூறவும் கோபுரம்  உயர்ந்திருக்கிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல மாடி கட்டிடங்கள் வந்த பிறகு ஆலயம் இருப்பதைத் தேடி கண்டு பிடிக்க வேண்டிருக்கிறது என்றாள் நண்பணின் மனைவி
இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்கிறார்ளோ  என்று கேட்டாள் சகதர்மணி.

சரியாகச் சொன்னாய். ....... இது நண்பன்.

கோபுரத்தின் அருகில் சென்று அதன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்கள் இருப்பதை காண்கிறோம். அவற்றுள் மனித  வடிவங்களையும் காணலாம்.  இறைவனின் திருவிளையாடல்கள்அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், சிருங்கார காட்சிகள், ஏனைய  சிற்றுயிர்கள்   இருக்கும்.  பிரபஞ்ச அமைப்பில் இவைகளுக்கும் இடமுண்டு என்பதைதான் அவைகள் குறிப்பிடுகின்றன. சுருங்கச் சொன்னால் உலகில் இன்னது இருக்கிறது என்று பறை சாற்றி இயற்கையின் நடைமுறையின் புறச்சின்னம்தான் கோபுரங்கள்.

கோபுரத்தில் பல சிற்ப வேலைப்படுகளை பார்க்கிறோம். இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் ( காஞ்சி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்) சொன்னதாக திரு நாகஸ்வாமி அவர்கள் எழுதியிருப்பதை நினவு கூற வேண்டும்.  ஆதிகாலத்தில்... அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது.  அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை விஸ்வகர்மாவாக வந்து வடிவமைத்ததுபோல... அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் விஸ்வகர்மாவாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே, நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்கவேண்டும்

கோபுரம், விமானம் எல்லாம் ஒன்றுதானே?
இல்லை. நுழை வாயிலில் இருப்பது கோபுரம். கருவறை மேல் இருப்பது விமானம்.

கருவறைன்னா? - நண்பண்

ஆலையத்தின் பிரதான கடவுள் இருக்கும் இடம் sanctum sanctorum  என்பார்களே அதுதான்.

ஆரம்ப காலத்தில் கருவறையின் மேல் மட்டும்தான் விமானம்  கட்டப்பட்டது. ஆனால் பிற்பாடு மதில் சுவரின் மேல் கோபுரம் கட்டும் வழக்கம் வந்தது. கோபுரம் என்றால் கோயிலின் பெருவாயில்; சிகரி என தமிழில் சொல்வார்கள். எப்படி இந்த வழக்கம் வந்திருக்கக்கூடும் என்பதற்கு போசி ப்ரொவுன் என்பபவர் தன் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்.

தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான சிறிய கோயில்களுட் பல, கட்டிடக்கலை அடிப்படையில் சிறப்பு வாய்ந்தனவாக இல்லாவிட்டாலும், புனிதத்தன்மை கொண்டனவாகக் கருதப்பட்டன. இந்த உணர்வு காரணமாகப் பெரிதாக்குவதற்காக அவற்றை இடிப்பது கூடாது எனக் கருதப்பட்டது. இதனால் கருவறையை அவ்வாறே இருக்கவிட்டு அதனை அண்டி வேறு அமைப்புக்களை உருவாக்கிக் கோயிலை விரிவாக்கினர். கோயிலின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக அதனைச் சூழப் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. வாயில்களிலே கோபுரங்களும் விமானத்தையும் தாண்டிப் பெரியவையாக வளரலாயின. கோபுரங்களின் உயரம் வளர்வது கோயிலின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி அதனைக் கட்டுவித்தவரது அதிகார பலத்துக்கும் சாட்சியாக அமைந்தது

கோபுரம் ஒரு கம்பீரத்துடன் ஒங்கியிருந்தால் அதை இராஜ கோபுரம் எனப்படும்

கோபுரத்தின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினென்று என்ற நிலையில் கோபுரம் வாயில் அமைந்திருக்கும். அத்தகைய வாயில் தத்துவத்துக்கு ஒரு விளக்கம் அளிப்பார்கள்.  மூன்று வாயில் உள்ள இராஜ கோபுர இடம் ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளை குறிப்பதாகவும்  ஐந்து வாயில்கள் உள்ள இடம் ஐம்பொறிகளை குறிப்பதாகவும்ஏழு வாயில் உள்ள இடம் மனம், புத்தி எனும் இன்னும் இரண்டு தத்துவங்கள் ஐம்பொரிகளுடன் சேர்க்கப் பெறுவதாகவும். இதனுடன் இன்னும் இரண்டு தத்துகவங்கள் சித்தம், அகங்காரம்- சேர்ந்து ஒன்பது வாயிலை குறிப்பதாகவும் சொல்வார்கள். இவ்வாறு கோயில் வாசல் வெவ்வேறு தத்துவங்களுக்குக் சின்னங்களாக அமைந்திருக்கின்றன.  இங்கு நாம் காண்பது ஐந்து வாசல் கோபுரம்.

கதவைப் பார்த்தாயா?



ஆடும் பெண்கள், கோலாட்ட விளையாட்டுகள் இருக்கின்றன. பரத நாட்டிய முத்திரைகள் என்பர் சிலர். முன்பு இருந்ததை விட  தற்சமயம் இந்த கதவுகள் க்ஷீணமடைந்து இருக்கின்றன.  அவசியம் மாரமத்து பார்க்க வேண்டும். ஆஸ்தீக அன்பர்கள் மனமுவந்து உதவ வேண்டும்.

என்ன செய்யலாம்?

இந்த ஊரைச் சேர்ந்த இராமதாஸர் என்பவர் முயற்சி செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு  உறு துணையாக இருக்கலாம்.

4.ஸ்தல வரலாறு


4
ஸ்தல வரலாறு

முன்னோர் சமயம் ஆதிசேஷனுக்கும் வாயுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்ததாம். ஆதிசேஷன் யிலை மலையைத் தன் ஆயிரம் மகுடங்களால் இறுகப்பற்றிக் கொள்ளவும், வாயுதேவன் மலையை அசைக்க சண்ட மாருதமாக  வீசினானாம். அந்த சமயம் தேவர்களும் அஞ்சினர். ஆதிசேஷன் தன் பிடியை சற்றே தளர்த்த அந்த தருணத்தில் இரு சிகரங்களை பெயர்ந்து ஒன்று திருநல்லூரிலும், மற்றொன்று பக்கத்தில் இருக்கும் ஆவூரிலும் விழுந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அம்மலைச் சிகரமே திருநல்லூரில் ஸ்வாமி எழுந்தருளிக்கும் மலையாகும். இச்சிகரத்திற்குச் சுந்தர கிரி, தென் கயிலாயம் என பெயர் அப்பொழுதிலிருந்து வழங்கப்படலாயிற்று என்பர். நன்னிலம் கிராமத்தில் உள்ள மதுவனேஸ்வேரர் மாடக்கோயிலும் இவ்வாறு விழுந்த ஒரு குன்றில் கட்டப்பட்டதாக அந்த ஊர் ஸ்தல வரலாறு சொல்கிறது.

ப்தஸ்தான விழா என்று கேள்விபட்டிருப்பாயே.

திருவையாறு ப்தஸ்தான விழாதானே!

ஆமாம் திருவையாறு, அதற்கு அருகாமையில் அமைந்த ஆறு சிவாலயம் அமைந்த ஊர்களான திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டீயூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் ஆகிய ஊர்களில்   திருவையாறு ஸ்வாமி வலம் வரும் விழாவாகும்.

என்ன அந்த ஊர் விசேஷம்? அது என்ன வழக்கம்?

நந்தி பகவான் சுயம்பிரகாசயியை திருமழப்பாடி தலத்தில் திருமணம் செய்து கொண்ட பொழுது  திருவையாற்றிலிருந்து புனித நீரும், திருப்பழனத்திலிருந்து பழவகைகளும், திருவேதிக்குடியிலிருந்து வேத வித்தகர்களும், கண்டீயூரிலிருந்து மகர கண்டிகை போன்ற ஆபரணங்களும், திருநெய்தானத்திலிருந்து நெய்யும் மற்ற பொருட்களும் வந்தனவாம். திருமணம் முடிந்தபிறகு நந்திதேவர் இத்தலங்களுக்கு தன் மனைவியுடன் திருவுலா சென்று வந்தாராம். அதன் பொருட்டுத்தான் இந்த ஏழ் ஊர்த் திருவிழா ( ஸப்த ஸ்தானம்).   
 
அதனை பின்பற்றி பிற்காலத்தில் கஞ்சனூர் சப்தஸ்தான விழா, (திருக்கோடிகா, திருவாலங்காடு, திருவாடுதிறை, தென் குறங்காடுததுறை, திருமங்கலகுடி, திருமாந்துறை, கஞ்சனூர்), கும்பகோண சப்தஸ்தான விழா, (திருக்கலய நல்லூர், தாரசுரம், சுவாமிமலை, திருவலஞ்சுழி, கொட்டையூர், காயாரோகனம், கும்பகோணம்), திருநீலக்குடி சப்தஸ்தான விழா (இனந்துரை, திருநாகேஸ்வரம், திரிபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுரை, மருத்துவக்குடி, திருநீலக்குடி), அய்யம் பேட்டை சப்தஸ்தான விழா (சக்கரமங்கை (திருச்சக்ரபள்ளி), அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (பசுபதி கோயில்), தாழமங்கை, புள்ளமங்கை  )   திருவானக்கா சப்தஸ்தான விழா ப்தஸ்தான விழா என்று வழக்கத்தில் வந்தது. அதே அமைப்பில் நல்லூர் ப்தஸ்தான விழாவும் சுமார் 50 – 60 வருடங்களுக்குமுன் வரை நடந்து வந்ததாக சொல்ல நாங்கள் கேட்டிருக்கிறோம். திருநல்லூர் ஆண்டவன் கோலாகலமாக ஊர்வலம் வரும் ஏழ் ஊர்த் திருவிழாஇந்த தலைமுறையினர் காணக் கொடுக்க புண்ணியம் செய்யாதவர்கள்.

நல்லூர் ஸப்தஸ்தானம் எந்த எந்த ஊர்?

ரங்கநாதபுரம், கிளியூர், கோவிந்தகுடி, ஆவூர், (ஏரி, பனந்திடல், மாளிகைத்திடல், மட்டியாந்திடல், பாபநாசம் வழியாக), திருப்பாலத்துரை, உத்தாணி. இங்கு என்ன விசேஷம் என்றால் ஸ்வாமியுடன் அகஸ்த்ய முனிவரும் செல்வார்.

அது என்ன அகஸ்த்ய முனிவர் இங்கு வந்தார்?

இந்த ஸ்தலத்திற்கும் அகஸ்த்திய முனிவருக்கும் ஒரு தொடர்பு உண்டு. முன்பு கயிலை பார்வதி பரமேஸ்வரரின் திருமணத்திற்கு எல்லோரும் வந்திருந்தனர். அதனால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து ஒருவிதமான unbalance ஏற்பட்டது. அதனை சமன் செய்ய அகஸ்திய முனிவரை தென் திசை போய் சமன் செய்ய ஆண்டவன் கட்டளையிட்டான். “நான் திருமண காட்சியை பார்க்கவேண்டாமா” என முனிவர் கேட்டதற்கு “நீ இருக்கும் இடத்தில் காட்சி தருவோம்” என ஆண்டவன் பதில் அளித்தான். அகஸ்த்ய முனிவருக்கு திருமண காட்சி கொடுத்த ஸ்தலம் திருநல்லூர். அதனால் அகஸ்த்ய முனிவருக்கு இங்கு ஒரு சிறப்பு, ஆண்டவன் திருமணத்தை தூரத்தில் இருந்து பார்த்தவராயிற்றே?

“Live telecast in today’s parlance. அப்படித்தானே?” என்று கேட்டாள் நண்பனின் மனைவி.

“In a way you are right” ஆனால் அந்த காலத்தில் நம்முனிவர்கள் தங்கள் தவ வலிமையினால் தூரத்தில் நடக்கும் நிகழ்சிகளை வேறு உபகரணங்கள் இல்லாமலே பார்க்கும் வலிமை பெற்றிருந்தார்கள். சமீப காலத்தில் கூட ஸ்ரீ ரமணர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ( காஞ்சி பெரியவர்), ஸ்ரீ அரவிந்தர் போன்ற தவ முனிவர்கள் இத்தகைய ஆற்றல் பெற்றிருந்தார்கள் என அவர்கள் வரலாற்றை படிக்கும் போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாருங்கள் ஆலயத்திற்குள் போகலாம்.

3.மாடக்கோயில்


3
மாடக்கோயில்

“குளத்தில் இறங்கி குளிப்பதற்குக்கூட சில விதிமுறைகள் இருக்கின்றன தெரியுமா?”

அப்படியா அது என்ன?”, இது என் நண்பனின் மனைவி தொடுத்த கணை.

“குளத்தில் இறங்கும் பொழுது கால்களை முதலில் இறங்குவதற்கு முன்னால் படித்துறையிலிருந்து கொண்டே கையினால் சிறிது நீரையெடுத்து தன் சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். நீராட இறங்கினாலும் தலை ப்ரோஷணம் செய்து கொண்டு குளத்தில் இறங்கி ஆலயம் இருக்கும் பக்கம் பார்த்துக் கொண்டு நீராட வேண்டும். நதிகளில் நதி வரும் திசை நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். இதுதான் முறை. அப்படியே நாமும் செய்வோம்.


இந்த கோயில் ஒரு மாடக் கோயில்களில் ஒன்றாகும்.

மாடப்புறா கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன மாடக் கோயில்?”, இப்படி கேட்டது சாட்சாத் என் தர்ம பத்தினியே.

 இதைப் பற்றி விளக்குவதற்கு நான் ஒரு புராணக் கதை சொல்லப் போகிறேன். கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும். நான்தான் தர்மபதி ஆயிற்றே. அவள் ஆசையையும் பூர்த்தி செய்யலாமே. மூவரும் ஆர்வத்துடன் என்னைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 காலச் சுழல்  பின் நோக்கி செல்கிறது....

காவிரி நதிக்கரையில் திரு ஆனைக்காவில் (திருவானைக்கா) ஒரு சோலையில் வெண் நாவல் மரத்தடியில் இருந்த  சிவலிங்கத்தை ஒரு வெள்ளை யானை பூஜித்து வந்தது. தும்பிக்கையினால் தண்ணீர் சுமந்து வந்து, பூக்களை கொய்து வந்து சாத்தி வணங்கி வந்தது.  அதே இடததில் அதே காலக் கட்டத்தில் ஒரு சிலந்தி பூச்சியானது மரத்தின் இலைகள் ஈசனின் மேல் விழாமலிருக்க தன் வாய் நூலால் பந்தலிட்டு வந்தது. தான் பூஜித்து வந்த இடத்தில் சிலந்தியின் எச்சில் கூட்டை கண்டு அது அசுத்தம் என யானை அதை அழித்து விடும். சிலந்தி பின்னும் பின்னலிடும். இவ்வாறாக பல நாட்கள் நடந்து வந்தது. தான் கட்டிய பந்தலை அழிப்பது யார் என பார்க்க சிலந்தி பூச்சி மறைந்திருந்து பார்த்து, யானை என்று அறிந்து கோபம் கொண்டது. நம்போல்தான் அனைவரும் என்று ஆறறிவு படைத்த பல மானிடருக்கே தெரியாத பொழுது சிலந்தியிடம் எதிர்பார்கலாமா?

யானையை கொல்ல நினைத்து. தானும் மாண்டு போவோம் என அறியாமல் யானையின் துதிக்கைக்குள் நுழைந்து கடித்தது. துன்புற்ற யானை துதிக்கையை பலமுறை தரையில் ஓங்கி அடித்தால் சிலந்தியும் இறந்தது. யானையும் சிலந்தியின் விஷத்தால் மாண்டது. பரஸ்பரம் கோபம் இருந்தாலும், மூல காரணம் இருவருக்குள்ளும் இறைவன்பால் இருந்த பக்திதான் என்பதால் உமையொருபாகன்  காட்சி தந்து திரு அருள் புரிந்தார். நமக்குள் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் ஆண்டவனுக்கு யாவருமே சமம். இருவருக்கும் அருள் புரிந்தார். யானை சிவபதம் அடைந்தது. சிலந்தி சோழவம்சத்தில் அரசனாக பிறந்தது. இரண்டுமே சிவப்பூசை செய்தாலும், சிலந்தி யானையை கொல்ல முதலில் நினைத்ததால் அதற்கு மீண்டும் பிறக்க நேரிட்டது. ஆயினும் முன் பிறப்பில் செய்த சிவத்தொண்டினால் மீண்டும் சிவத்தொண்டு செய்யும் பாக்கியம் கிட்டியது. சோழ அரசனாகப்  பிறந்தது அந்த சிலந்தி. கோப்பெரும் சோழன் என்ற பெயர் பெற்றான். முற்பிறப்பின் உணர்வினால் பல சிவாலயங்களைக் கட்டினான் அவன். அவன் கட்டிய கோயில்கள்தான் மாடக்கோயில்கள் எனப் பிற்காலத்தில் வழங்கப் பெற்றது.

அவன் கட்டிய காலம் எப்போது?

சுமார் கிபி 3 – 4 ம் நுற்றாண்டு.

அப்படியென்றால் இந்த கோயில் 1700 ஆண்டுகளா?

அப்படித்தான் தோன்றுகிறது. அவன் கட்டிய காலத்தில் செங்கல்லும் மரமும்தான் உபயோகித்திருப்பதாக வரலாறு சொல்லுகிறது. பிற்காலத்தில் (கி.பி 7ம் நுற்றாண்டில்) கருங்கல் அமைத்து கட்டப் பட்டிருக்க வேண்டும்.

அவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தினான். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவனாக இன்றும் கொண்டா டப்படுகின்றான்.

சிலந்தியும் ஆனக்காவில் திருநிழல்பந்தர் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக்
கலந்த நீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே

என்று சிலந்திச் சோழனாக பிறந்ததைப் பாடினார் அப்பர் பெருமான்.

பசுபதி கோயில் பசுபதீஸ்வரர் ஆலைய கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.


அப்படியா ஆச்சரியமாக இருக்கின்றதே.

முன்பிறவியில் யானை செய்த செய்கையினால் அதன் மீது பகை கொண்டு யானை புக முடியாதபடி அவன் கட்டிய கோயில்களே மாடக்கோயில்களாகும். யானை பெரிய உருவம் கொண்டது. அதனால் படிகளில் ஏற முடியாது. அப்படி ஏறினாலும் இறங்க முடியாது. அதனால் யானை இறங்கமுடியாமலோ அல்லது ஏற முடியாமலோ இருக்கும்படியான கோயில்களை கட்டினான். இப்புதுமையான அமைப்புமுறையில் செய்யப்பட்ட கோயில்களில் கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் அமைக்கப் பட்டது. சங்ககாலத்துக் கோயில்களின் அமைப்பு முறையிலிருந்து கோப்ப்பெரும்சோழன் கோயில் அமைப்பு முறைகள் மாறுபட்டன... தஞ்சை பெரிய கோயில் போன்று உயரம் அதிகமாக்கப்பட்ட தளத்தில் அமைக்கப்பட்ட கோயில்களை மாடக்கோயில் என்று சொல்லப்படுவதில்லை. இதை வேறு விதமாகவும் சொல்லாம் யானை – சிலந்தி கதை இல்லாமல். செங்கல்லினாலும் மரத்தினாலும் கட்டப்படும் கோயில்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற உயரமான இடத்தில் அமைக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கும். அதனாலேயே ஒரு உயரமான இடத்தில்கோயில்கள்கட்டப்பட்டிருக்க
வேண்டும்.

ஒரு வெற்று தளத்தின் மேல் கட்டப்பட்ட கோயிலாகும் ‘கோயில் கட்டடக் கலை வளர்ச்சியில் ஒரு படி’ என்று மாறுப்பட்ட கருத்தும் உண்டு.

இதைத்தவிர அவன் கட்டிய கோயில்கள்  எது?

செம்பியன் கோச்செங்கண் சோழன் கட்டிய சிவன் கோயில்கள் எழுபதாகும்.


இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசர்க்கு
எழில்மாடம் எழுபதுசெய் துலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மிங்களே 

என திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.

அவன் கட்டிய மற்ற கோயில்களிலின் பட்டியல் ஒன்று இருக்கிறது என்னிடம் கேட்டு வாங்கிக்கொள். (அந்த பட்டியல்

நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருமருகல் மாணிக்கவண்ணர் திருக்கோயில், தேவனூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், வலிவலம் மனத்துணை நாதர் திருக்கோயில், குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில், சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், திருவிளையாட்டம் சுயம்பு நாதர் திருக்கோயில், சாயானம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், வைகல் வைகல் நாதர், மணக்கால் அய்யம்பேட்டை (பெரு வேளூர் ) அபிமுக்தேஸ் வரர் திருக்கோயில், திரு அம்பர்ப் பெருந்திருக் கோயில், திருவைகன் மாடக்கோயில், திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் ஆலயம் ( அஜனீஸ்வரம்), பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் (ஆலந்துறை நாதர்)ஆலயம், பெண்ணாகடம், இலுப்பைப் பட்டு (மண்ணிப்படிக்கரை), செம்பிருப்பு செம்பனார் கோயில் ஸ்வர்ணபுரீஸ்வரர், வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், தான்தோன்றீசுவரர் கோயில், பெருமுளை, தேரழுந்தூர், மாத்தூர், எண்கண், அம்பர் மாகாளம், பாம்புரம், திருக்கழந்தை,  இராசசேரிபுரம், கீழைவழி ( கீழையூர், கீழூர்) கடைமுடிநாதர், அந்தி சம்ரக்ஷணீஸ்வரர் தண்டலை நீள்நெறி நாதர் கோவில் ( தண்டலச்சேரி), நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காய ரோகணம், வீழிமிழலை, பனையூர் திருமீயச்சூர் மேகநாத ஸ்வாமி கோயில், திருவானைக்கா, மண்ணச்சநல்லூர்: பணமங்கலம் வாரணபுரீஸ்வரர் கோவில் (சுவாமி திருமேனி உளிப்படாத ஆவுடை சதுர்முகநாதர் லிங்கமாக உள்ளது))

நல்லூரையும் சேர்த்து 49 கோயில்கள். மற்ற 21 கோயில் விபரம் கிடைக்கவில்லை. கால வெள்ளத்தில் அழிந்திருக்கலாம். அல்லது மாற்றி அமைத்திருக்கலாம்.

இவைகளில் அளவில் பெரியது இந்தக் கோயிலாகிய கிரிசுந்தரி ஸமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் ஆலயமே.

1700 ஆண்டுகள் புராதானமான கோயில் என்று கேட்டாலே மலைப்பாக இருக்கிறதே!

இருக்காதா பின்னெ. நம் செல்வங்கள் அவ்வளவு புராதானமானது.